Wednesday, August 18, 2010

வசுந்தரா என்க்ளேவ் விஸ்வேஸ்வர சமாஜம்(பதிவுற்றது) நிர்மாணித்த அருள்மிகு சங்கடஹர கணபதி கோயில் குடமுழுக்கு நீராட்டு விழா

செய்தி அறிக்கை

வசுந்தரா என்க்ளேவ் விஸ்வேஸ்வர சமாஜம்(பதிவுற்றது) நிர்மாணித்த அருள்மிகு
சங்கடஹர கணபதி கோயில் குடமுழுக்கு நீராட்டு விழா

தில்லி மாநகரில் அமைந்திருக்கும் அருள்மிகு சங்கடஹர கணபதி கோயில்
குடமுழுக்கு நீராட்டு விழா ஆகஸ்ட் 29, 2010 ஞாயிற்றுக் கிழமை காலை 7.30
க்கு மேல் 8.15 மணிக்குள் மிகக் கோலாகலமாக நிகழவுள்ளது. இப் பெருவிழா
ஆகஸ்ட் 27ம் தேதி காலை கணபதி பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து ஆகஸ்ட் 29ம்
தேதி காலை வரை நான்குகால யாகபூஜையும் மற்றும் பல மந்திரக் க்ரியைகளும்
நடக்கப்பெற்று ஞாயிறு காலை கும்பாபிஷேகத்- துடன் நிறைவுற்று மறு
நாள்முதல் 48 நாட்களுக்கு மண்டல அபிஷேகமும் நிகழும்.
தமிழகத்திலிருந்து பல கோயில் கும்பாபிஷேகங்களை இதுவரை வெற்றிகரமாக
நிகழ்த்தியுள்ள 32 வேத விற்பன்னர்களை கோவிலை நிர்மாணித்த வசுந்தரா
என்க்ளேவ் விஸ்வேஸ்வர சமாஜம் (பதிவுற்றது) இந்நிகழ்ச்சிக்காக வரவழைத்து
குடமுழுக்கு நீராட்டு விழா ஆகம விதிப்படி, வேத சாஸ்த்திர முறைப்படி
நடத்தப்படுகிறது. தென்னிந்திய கலாச்சார முறைப்படி நடக்கும் இவ் விழா
இங்குள்ள பக்தர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் எள்ளளவும்
ஐயமில்லை என்று எல்லோராலும் கருதப்படுகிறது.

அருள்மிகு சங்கடஹர கணபதியை மூலவராகக்கொண்ட இக்கோயிலில் மூலவரின் எடை 450
கிலோ, 4.5 அடி உயரம் கொண்ட அற்புத மூர்த்தி. அவருக்குப் பரிவார
தெய்வங்களாக சுவாமி ஐயப்பன், சிவன்-பார்வதி, வள்ளி-தெய்வயானையுடன்
குடிகொண்ட சுப்ரமண்ய சுவாமி, ஹயக்ரீவர், ஹனுமான் மற்றும் நவக்ரஹங்கள்,
மேலும் கோஷ்டா தெய்வங்களான தக்ஷிணாமூர்த்தி, ப்ரஹ்ம்மா, விஷ்ணு, துர்க்கை
மற்றும் நிருத்திய கணபதி ஆகியோர் மூலவரைச் சுற்றி சந்நிதியை
அலங்கரிக்கவுள்ளனர்.
தென்னக கலாச்சாரத்தைக்கொண்டு அமையப்பெற்ற இம்மூர்த்திகளுக்கு தனி
விமானமும், கோயில் நுழைவாயிலில் 35 அடி உயரம், 25 அடி அகலமுள்ள மூன்று
அடுக்குகளைக் கொண்ட ராஜகோபுரமும் அதன் மேல் சுமார் 50 பதுமைகள்
வடிக்கப்பட்டு அலங்காரமாயும், கம்பீரமாகவும் பக்தர்களை வரவேற்கின்றன.

பண்டுருட்டியைச் சேர்ந்த குமரகுருபர ஸ்தபதிகள் இக்கோயிலை
வடிவமைத்துள்ளார். புகழ்பெற்ற சிற்பியான அவர்வசம் தற்சமயம் 500
கோயில்கள் இந்தியாவின் பல மூலைகளிலும், சில வெளிநாடுகளிலும்
அமையப்பெறவுள்ளன. இக்கோயில் பதினெட்டே மாதகாலத்தில் அவரது குழுவினரால்
வடிவமைக்கப் பட்டுள்ளது.

"இக்கோயிலின் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 29ம் தேதி நடைபெறவுள்ளது என்பது,
எங்கள் சமாஜத்தின் அங்கத்தினர்கள் உழைப்பாலும், நூற்றுக்கணக்கான
பக்தர்களின் ஆதரவாலும் மட்டுமே நிறைவேறியது," என்கிறார் சமாஜத்தின்
தலைவர் திரு ஆர்.கே.வாசன். "இறைவன் அருளாள் எங்களது இம்முயற்சி
ஈடேறியுள்ளது," என்று மேலும் அவர் கூறினார்.

விழாவின் மூன்று நாட்களிலும் பஜனை, கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீகச்
சொற்பொழிவுகளும் நிகழவுள்ளன.

வசுந்தரா என் க்ளேவ் விஸ்வேஸ்வர சமாஜம் இன் நிகழ்ச்சிக்கு தில்லி
முதலமைச்சருக்கும் மற்றும் சில பா.ஜ.க தலைவர்களுக்கும் அழைப்பு
விடுத்துள்ளது. அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: